அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்பு நாளில் (ஜனவரி 20, 2025) முதல், திருநங்கைகள் (டிரான்ஸ்ஜென்டர்) தொடர்பான பல மாற்றங்களை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடைபெற்ற இளம் பழமைவாதிகளுக்கான நிகழ்வில் பேசிய ட்ரம்ப், “திருநங்கைகளின் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்துவோம்” என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:
குழந்தைகளின் பாலியல் சிதைவை நிறுத்தவும், திருநங்கைகளை தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து வெளியேற்றுவேன்.
பெண்களின் விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பேன்.
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக, ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும்; இதற்கான நிர்வாக உத்தரவுகளில் முதல் நாளே கையெழுத்திடுவேன்.
மேலும், ட்ரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகளை வெளியேற்றும் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளார். அவர் பதவியேற்றதும், திருநங்கைகள் புதிதாக ராணுவத்தில் சேர்வதைத் தடுக்கவும், ஏற்கனவே பணியாற்றி வரும் திருநங்கைகளை மருத்துவ பரிசோதனை மற்றும் உடற்தகுதி அடிப்படையில் பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இந்த அறிவிப்புகள், அமெரிக்காவில் திருநங்கைகள் மற்றும் LGBTQ+ சமூகத்தினரின் உரிமைகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளன. சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இந்த நடவடிக்கைகள் அவர்களின் உரிமைகளை பறிக்கும் முயற்சியாக கண்டித்துள்ளனர்.