முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம்

பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது.

By Web Desk

Published on:

---Advertisement---

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) டிசம்பர் 30, 2024 அன்று பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட், தலா 220 கிலோ எடையுடைய எஸ்.டி.எக்ஸ்.1 மற்றும் எஸ்.டி.எக்ஸ்.2 என்ற இரண்டு சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இவை பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இஸ்ரோ, தனது கனவு திட்டமான ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேட் எக்ஸ்’ (SPADEX) எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில், விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ எனப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இஸ்ரோ தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) வலைதளத்தில், “ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி வெற்றியடையுமானால், விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை சாதித்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.